குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த இளம்பெண் - திண்டுக்கல்லில் பரபரப்பு

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் சென்னை தமிழில் பேசினார்.
குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த இளம்பெண் - திண்டுக்கல்லில் பரபரப்பு
Published on

திண்டுக்கல்,

மது என்னும் மாய அரக்கன், மாதுக்களையும் (பெண்கள்) விட்டு வைக்கவில்லை. இதற்கு ஆங்காங்கே அரங்கேறும் நிகழ்வுகளே சாட்சி. அப்படி ஒரு சம்பவம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று முன்தினம் நடந்தது. அதாவது வேடசந்தூர் ஆத்துமேடு பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் மதுபோதையில் இருந்தார். தள்ளாடியபடி சாலையில் நடந்து வந்த அவர், வேன் நிறுத்தத்தில் இருந்தவர்களிடம் தகராறு செய்தார்.

பின்னர் திடீரென அவர், ஒட்டன்சத்திரம் சாலையில் சென்ற லாரி, கார், ஆட்டோ ஆகியவற்றை கையை நீட்டி வழிமறித்தார். இதனால் வாகனங்கள் வரிசையாக நின்றன. மது மயக்கத்தில் இருந்த அவர் தன்னிலை மறந்தார். அவர் உளறி கொண்டே இருந்தார்.

நடுரோட்டில் நின்று கொண்டு தான் என்ன செய்கிறோம் என்று கூட அந்த இளம்பெண்ணுக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவரது அட்டகாசத்தை தடுக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர். ஆனால் யாருடைய பேச்சையும் அவர் கேட்காமல் வசைபாடி கொண்டே இருந்தார்.

போதையில் பாதை மாறி இளம்பெண் செய்த அட்டகாசம் அங்கிருந்த ஆண், பெண்களை முகம் சுளிக்க வைத்து விட்டது. இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயார் ஆனார்கள். இதுபற்றி அந்த பெண்ணிடமும் சிலர் சொல்லி கொண்டிருந்தனர். குடிபோதையில் இருந்த போதிலும், போலீஸ் என்றவுடன் இளம்பெண்ணுக்கு அச்சம் ஏற்பட்டது. இதற்கு மேல் இனி இங்கு இருந்தால், போலீசாரிடம் சிக்கி கம்பி என்ன வேண்டியிருக்கும் என்று கருதிய அவர், அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்தார்.

அந்த சமயத்தில், வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது. அந்த பஸ்சை இளம்பெண் வழிமறித்தார். பஸ் நின்றவுடன், கண்இமைக்கும் நேரத்தில் பஸ்சில் ஏறி சென்று விட்டார். இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் சென்னை தமிழில் பேசினார். இதனால் அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏதேனும் ஒரு மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அவர் வேடசந்தூருக்கு எதற்காக வந்தார் என்று தெரியவில்லை என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com