கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கள்ளசாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். தற்போது வரை 11 பேர் பலியாகியுள்ளனர். 34 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கள்ளச்சாராயத்தில் மெத்தனாலை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளசாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும். மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com