உலரவைத்த பட்டாசு திரிகள் தீ பிடித்து எரிந்தன - குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயம்

உலரவைத்த பட்டாசு திரிகள் தீ பிடித்து எரிந்தன. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
உலரவைத்த பட்டாசு திரிகள் தீ பிடித்து எரிந்தன - குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயம்
Published on

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் பணி புரிந்து வந்த வெங்கடேசன், நக்மா தம்பதியினர் பட்டாசு திரி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கொண்டு வந்து புதூர்மேடு பகுதியில் உள்ள வீட்டில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்தனர்.

இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட பட்டாசு திரிகளை வீட்டின் அருகே வெயிலில் உலர வைத்திருந்தபோது, வெங்கடேசனின் குழந்தைகள் 3 வயது அஸ்வின், ஒன்றரை வயது அனுபல்லவி ஆகியோர் பட்டாசு திரியை எடுத்து விளையாடினர். அப்போது அதை கொளுத்த தீ பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் பட்டாசு திரிகள் தீப்பற்றி எரிந்தன. எனவே 2 குழந்தைகள் மீதும் தீ காயங்கள் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த குழந்தைகள் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடி வந்த நக்மாவும் தீ காயமடைந்தார். படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், வருவாய் ஆய்வாளர் கமல், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. ஹஸ்ரத் பேகம் அனுமதி வழங்கிய இடத்தில் பட்டாசு திரிகளை தயார் செய்யாமல், சட்ட விரோதமாக குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு திரி தயாரிக்க மூலப் பொருட்களை வழங்கிய ஆலை மற்றும் கடைக்கு சீல் வைத்தார். மேலும் வருவாய்த்துறையினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் முகமது அலியை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com