போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

கும்பகோணத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கூறினார்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
Published on

கும்பகோணத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

கும்பகோணம் மாநகர பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக வியாபாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் பகுதி வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு மற்றும் சாரங்கபாணி தெற்கு வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கினார். கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வரவேற்றார்.

ஆன்மிக சுற்றுலா தலம்

கூட்டத்தில் மக்களுக்கான பொலிவுறு போக்குவரத்து செயல்பாடுகள் என்ற தலைப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'கும்பகோணம் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும், ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

இதனால் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்குபடுத்த பகுதி வாரியாக கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு வழிப்பாதையை அமல்படுத்துதல் மற்றும் ஒரு பக்கமாக வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்டவை சோதனை முறையில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

பொலிவுறு போக்குவரத்து கட்டமைப்பு

வருகிற 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகம் திருவிழாவை முன்னிட்டு தொலை நோக்கு திட்டத்துடன் மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு பணியாற்றி வருகிறது.

சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் பெறப்படும் தரவுகளை கொண்டு மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் வழிகாட்டுதல் படி நிலையான பொலிவுறு போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்கப்படும். இதற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகி அயூப்கான், மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் கியாசுதீன், உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் குழந்தைவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com