துபாய்-சென்னை விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு - பயணிகள் அதிர்ச்சி

30 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வந்த சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
துபாயில் இருந்து சென்னைக்கு இண்டிகோ, எமிரேட்ஸ் உள்ளிட்ட விமானங்கள் நேரடி விமான சேவையை வழங்கி வருகின்றன. இந்த விமான சேவைகள் தொடங்குவதற்கு முன்னதாக சென்னையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் துபாய்க்கு நேரடி விமான இயக்கப்பட்டது. இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்டதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.
அரசு நிறுவனமாக இந்த நிறுவனம் இருந்து வந்ததால் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இருந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய்-சென்னை இடையே விமான சேவை இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது திடீரென துபாய்-சென்னை இடையிலான விமான சேவை நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு தினமும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த விமான சேவை மிகவும் நல்ல வருவாயை ஈட்டி வந்தது. எனினும் விமான சேவையை நிறுத்திவிட்டு பெங்களூரில் இருந்து துபாய்-க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தை ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக புறக்கணிக்கிறது என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே மத்திய-மாநில அரசுகள் ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் பேசி துபாய்-சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






