வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக: மதுரை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக: மதுரை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. வேப்பேரி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர், தியாகராயநகர், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை திடீரென மழை பெய்தது.

இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் நனைந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் பெய்த மழையால், பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீர் சாலைகளில் வடிய இடமின்றி தேங்கியதால், வழக்கத்துக்கு மாறாக முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை நின்ற சிறிது நேரத்தில் சூரியன் தலை காட்டியது.

4 மாவட்டங்களில் கனமழை

இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல்பகுதியில் (3.1 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக 23-ந்தேதி (இன்று) மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள்

24-ந்தேதி (நாளை) ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

25 மற்றும் 26-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இயல்பைவிட 65 சதவீதம் கூடுதல் மழை

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் கடந்த 22-ந்தேதி (நேற்று) வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 320.5 மி.மீ. மழை அளவு இயல்பாக பதிவாக வேண்டும். ஆனால் 529.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விடவும் 65 சதவீதம் அதிகம் ஆகும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தென்பரநாடு, மூக்கில்துறைப்பட்டுவில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு தாம்பரம், எடப்பாடி, பந்தலூர், ஆவடி, கீழ் அணைக்கட்டு பகுதியில் தலா 3 செ.மீ., எம்.ஆர்.சி. நகர், நந்தனம், தேவாலா, எம்.ஜி.ஆர்.நகர், தரமணி, நுங்கம்பாக்கத்தில் தலா 2 செ.மீ., பெரம்பூர், பள்ளிக்கரணை, எருமப்பட்டி, அண்ணா பல்கலைக்கழகம், சங்கரிதுர்க், ஸ்ரீபெரும்புதூர், தளி, அய்யம்பேட்டை, ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com