திருவொற்றியூரில் கால்வாய் பணி முடியாததால் 10 தெருக்களில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி

திருவொற்றியூரில் மழைநீர் கால்வாய் பணி முடியாததால் 10 தெருக்களில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
திருவொற்றியூரில் கால்வாய் பணி முடியாததால் 10 தெருக்களில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி
Published on

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலையோரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த பணி இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இதனால் அந்த இடங்களில் தோண்டிய பள்ளங்கள் அப்படியே உள்ளன. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளன.

திருவெற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் திருவொற்றியூர் மாணிக்கம் நகர், ஜோதி நகர், கார்கில் நகர், மணலி விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது.

சென்னை மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமனின் அலுவலகம் முழுவதுமே மழை நீரால் சூழ்ந்து உள்ளது. எண்ணூர் கத்திவாக்கம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். இப்பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி முடிவடையாததால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகளை பெயர்த்து மழைநீரை பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "மழை காலம் தொடங்குவதற்கு முன்பே சிறிய மழைக்கே வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. மழைநீர் வடிகால்வாய் பணியை முடிக்காததே இதற்கு காரணம். இதேநிலை நீடித்தால் வரும் நாட்களில் எங்களது நிலைமை மிகவும் மோசமாகி விடும். எனவே மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அதேபோல் கனமழை காரணமாக புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com