

சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழ்நாடு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகிற 26-ந் தேதி வரையில் (அதாவது இன்று முதல் 6 நாட்களுக்கு) கன முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதுதவிர வருகிற 23-ந்தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும், கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் அறிவித்துள்ளார். அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக அந்த மாவட்டத்தின் கலெக்டர் கவிதா அறிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்டங்களின் கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.