மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பாதிப்பு - பால்வளத்துறை அமைச்சருக்கு விஜயகாந்த் கண்டனம்

மதுரையில் பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சர் நாசர் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பாதிப்பு - பால்வளத்துறை அமைச்சருக்கு விஜயகாந்த் கண்டனம்
Published on

சென்னை,

மதுரையில் பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சர் நாசர் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்றும் இனியாவது துறை சார்ந்த பணிகளில் தனிகவனம் செலுத்தி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்றைய ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட டி.வி.எஸ்.நகர், அழகப்பன் நகர், பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர், முத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆவின் டெப்போக்களுக்கு அதிகாலை 3 மணிக்கு வர வேண்டிய பால்பாக்கெட்டுகள் வராத நிலையில், பால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரம் தாமதமான நிலையில், விற்பனை முழுமையாக பாதிக்கப்பட்டு பால் கெட்டு போய் விடும் என்பதால், தாமதமாக வந்த பால் வண்டியை டெப்போ முகவர்கள் திருப்பி அனுப்பினர்.

இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆவின் பால் விநியோகம் மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை கவனிக்காமல், தனது துறை சார்ந்த பணிகளை கிடப்பில் போட்டு விட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பால் வளத்துறை அமைச்சர் நாசருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பால் விநியோகம் தாமதமானதற்கு முழு பொறுப்பை அமைச்சர் நாசர் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும். இனியாவது துறை சார்ந்த பணிகளில் தனிகவனம் செலுத்தி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்றைய ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com