தொடர்மழையினால் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

தாயில்பட்டி பகுதிகளில் தொடர்மழையினால் சூரியகாந்தி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்மழையினால் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்
Published on

தாயில்பட்டி,

தாயில்பட்டி பகுதிகளில் தொடர்மழையினால் சூரியகாந்தி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சூரியகாந்தி சாகுபடி

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர்மழையினால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வெம்பக்கோட்டை அணையிலும் 2 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தாயில்பட்டி, விஜயரங்கபுரம், கீழகோதை நாச்சியார்புரம், கங்கர் சேவல், எட்டக்கப்பட்டி, சிப்பிப்பாறை, கொட்ட மடக்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300 ஏக்கரில் சூரியகாந்தியை கடந்த மார்ச் மாதம் விவசாயிகள் பயிரிட்டனர். தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சூரியகாந்தி பூக்கள் நன்கு பூத்துக்குலுங்குகின்றன. மகசூலும் எதிர்பார்த்ததை விட நன்றாக உள்ளது.

விளைச்சல் அமோகம்

இதுகுறித்து மடத்துப்பட்டி விவசாயி அழகர் ராமானுஜம் கூறியதாவது:-

தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் சூரியகாந்தியை சாகுபடி செய்துள்ளோம். பொதுவாக கோடைக்காலத்தில் சூரியகாந்தியை சாகுபடி செய்வது கிடையாது. தற்போது கால சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சூரியகாந்தி சாகுபடி செய்தோம்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக சூரியகாந்தி பூக்களின் விளைச்சல் நன்கு அதிகரித்து உள்ளது. பூக்கள் எதிர்பார்த்ததை விட நன்கு மலர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் சூரியகாந்தி அறுவடை செய்து விடலாம். தற்பாது சூரியகாந்தி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் அறுவடை சமயங்களில் இதன் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். விளைச்சல் நன்றாக இருப்பதால் குறைந்த அளவு உரம் இட்டால் போதும். களைகள் எடுக்க போதுமான அளவு கூலி ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com