டம்மி முதல்-அமைச்சர்... ஜோக்கர் அமைச்சர்கள்... உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்-அமைச்சருக்கு திராணி இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
டம்மி முதல்-அமைச்சர்... ஜோக்கர் அமைச்சர்கள்... உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Published on

தஞ்சாவூர்,

மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான கே.என்.நேரு வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

டம்மி முதல்-அமைச்சர்

குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்-அமைச்சர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை. ஆடி 18-ம் நாள் இன்று, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. "திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?" நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்-அமைச்சரால் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா முதல்-அமைச்சர பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகள முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தாரா?. தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என முதல்-அமைச்சர் விஜயிடம் கர்நாடக முதல்-மந்திரி கூறி விட்டார். ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்-அமைச்சர் விஜய். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்-அமைச்சருக்கு திராணி இல்லை.

சினிமாவிற்கு சென்று கண்ணீர்..

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்ல. விவசாயிகள் கண்ணீர் வடிக்கக்கூடிய நிலையில் அமைச்சர்கள் சினிமாவிற்கு சென்று கண்ணீர் வடிக்கிறார்கள். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் அதை எப்படி திசைதிருப்புவது என்ற வேலையில் ஈடுபடுகின்றனர்; தினமும் மாலை 4 மணி ஆனால் போதும்; ஏதாவது ஒரு ரீல்ஸ் போட்டு திசைதிருப்புகிறார் முதல்-அமைச்சர் விஜய்.

தண்ணீர் திறப்பது குறித்து ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் திமுக மக்கள் மன்றத்தில் போராடுகிறது. காவிரி விவகாரத்தில் திமுக சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.

ஜோக்கர் கூட்டம்..

தமிழக அமைச்சர்கள் அனைவரும் ரீல்ஸ் போடுவதிலேயே குறியாக உள்ளனர். நிருபர்களை பார்த்தால் திருடன் போல் ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த். "திருட்டு லாட்டரி விற்ற அமைச்சர், திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருளுடன் சுற்றும் அமைச்சர் என ஒட்டுமொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது. அமைச்சரின் அண்ணன், தம்பி எல்லாம் ஆய்வுக்கு செல்கிறார்கள். யார் அமைச்சர் என அதிகாரிகளுக்கே தெரியவில்லை. யார் யார் அமைச்சர் என முதல்-அமைச்சருக்கே தெரியாது.

முதல்-அமைச்சர் ரீல்ஸ், அமைச்சர்கள் ரீல்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் என அனைவரும் ரீல்ஸ் போட்டுக்கொண்டு சுற்றுகின்றனர். கழிவறையக் கூட விட்டுவைக்காமல் ரீல்ஸ் போடுகின்றனர். இந்த அரசிற்கு ரீல்ஸ் வெறி முத்திப்போய் உள்ளது. இதுபோன்ற ஒரு ரீல்ஸ் போடும் கேடு கெட்ட அரசை தமிழ்நாடு இதுவரைக் கண்டதில்லை.

வாயைத் திறங்க.. வாயைத் திறங்க..

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மெட்ரோ ரெயில் பாலத்திற்கு சென்று முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்கிறார். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ரீல்ஸ் போடுகிறார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவே முதல்-அமைச்சர் விஜய் தொடர்ந்து ஆய்வு செய்கிறார். காவிரி பிரச்சினை உச்சத்தில் உள்ள நிலையில் ரீல்ஸ் கண்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய். ஊரார் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்து கொண்டிருக்கிறார்.

அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்கிறார் விஜய்; இப்போதே அதை செய்யலாமே?. தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். திமுகவின் தூண்டுதலின் விவசாயிகள் போராடுவதாக கூறி கொச்சைப்படுத்தியவர் முதல்-அமைச்சர் விஜய். தமிழகத்தில் பலவினமான ஆட்சி நடக்கிறது; இதை புரிந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது.

“வாயைத் திறங்க.. வாயைத் திறங்க.. மேகதாது பிரச்சினையில் தூங்கி வழியும் முதல்-அமைச்சரே வாயைத் திறங்க.. வாயைத் திறங்க.. புரியலையா.. புரியலையா.. விவசாயிகளின் வேதனைகள்.. புரியலையா.. புரியலையா..”. இவ்வாறு அவர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com