உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு துரை வைகோ ஆதரவு

ஆஸ்பத்திரியில் இருந்தபடியே சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு துரை வைகோ ஆதரவு
Published on

சென்னை,

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டம் இன்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில் போராட்டத்தின்போது திடீரென சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்ததால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், தொடர்ந்து சசிகாந்த் செந்திலை டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும் ஆஸ்பத்திரியின் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் சசிகாந்த் செந்திலை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

மருத்துவமனையிலேயே மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுரைப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இன்று நான்காவது நாளாக எனது உண்ணா விரத போராட்டம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்கிறது. மதிமுக கழக செயலாளர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் வந்து ஆதரவு தெரிவித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com