

அடையாறு,
சென்னை கோட்டூர்புரத்தில் 26-ந்தேதி நள்ளிரவில் போலீசார் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார்சைக்கிளில் 5 பைகளுடன் வந்த வாலிபரை போலீசார் விரட்டிச்சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்த 3 பைகளை அந்த வாலிபர் சாலையில் வீசி சென்றார். அந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் ரூ.1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் நந்தனத்தை சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தனிப்படை அமைத்து, தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு கொள்ளையனை விரட்டிச்சென்று கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கைப்பற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ராமு, ஆயுதப்படை போலீஸ்காரர் சக்திவேல் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் அண்ணாசாமி ஆகியோரை நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி, 3 பேருக்கும் வெகுமதி வழங்கினார்.