வீடு கட்டும் பணியின் போது சாரம் ஒடிந்து விழுந்து கொத்தனார் சாவு

வீடு கட்டும் பணியின் போது சாரம் ஒடிந்து விழுந்து கொத்தனார் சாவு
Published on

குலசேகரம், 

குலசேகரம் அருகே வீடு கட்டும் பணியின் போது சாரம் ஒடிந்து விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

காத்தனார்

திருவட்டார் அருகே உள்ள ஆனையடி செங்கோடி பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 33), கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் குலசேகரம் அருகே உள்ள ஈஞ்சக்கோடு பகுதியைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவருடன் வேலைக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று ஈஞ்சக்கோட்டில் ஒரு வீடு கட்டும் பணி நடந்தது. இதற்காக மோசசும் மற்றொரு கொத்தனாரான ஸ்டேவான் (45) என்பவரும் சவுக்கு கம்புகளால் கட்டப்பட்ட சாரத்தின் மீது நின்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாரம் ஒடிந்து விழுந்தது. இதில் மோசசும், ஸ்டேவானும் கீழே விழுந்தனர். அவர்கள் மீது சிமெண்ட் சிலாப் ஒன்றும் விழுந்தது.

பரிதாப சாவு

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மோசஸ் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், ஸ்டேவான் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மோசஸ் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com