அம்மா உணவகங்களுக்கு அனுமதி,டாஸ்மாக் கடைகள் மூடல் தமிழக அரசின் முடிவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கபட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.
அம்மா உணவகங்களுக்கு அனுமதி,டாஸ்மாக் கடைகள் மூடல் தமிழக அரசின் முடிவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
Published on

சென்னை

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தோற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கபட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.

மே 10ஆம் தேதி முதல் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் இன்றும் , நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும், பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டம் கூடுதலை தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரம் இயங்குவதே அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மினி கிளினிக்குகளில் எண்ணிக்கையும் அதில் தற்காலிக மருத்துவர்கள் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும் . நோயாளிகளின் சிரமமும் களையப்படும்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து கோவிட் 19 தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அது சேவையை கௌரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொது மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com