

சென்னை,
தமிழகத்தில் பருப்பு சாகுபடியில் விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன. 80 சதவீதம் அளவுக்கு பருப்பு சாகுபடி அங்கேயே நடக்கின்றன.
ஆனால், கடந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால், 5 மாத பயிரான துவரையை சாகுபடி செய்வதை விவசாயிகள் விட்டுவிட்டு, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்தனர். இதனால், துவரம் பருப்பு உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இதனால், அதன் விலையும் அதிகரித்து வருகின்றது.
கிலோவுக்கு ரூ.16 உயர்வு
கடந்த மாதம் ரூ.110-க்கு விற்பனையான ஒரு கிலோ துவரம் பருப்பு, தற்போது ரூ.126 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, கிலோவுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது.
தென்மாவட்டங்களில் ஒன்றான மதுரை மாவட்டத்தில் துவரை விளைச்சல் 25 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதனால், விற்பனை கூடத்துக்கும் வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில், துவரையை பிரித்தெடுக்கும்போதே விவசாயிகளிடம் கரூர் வியாபாரிகள் நேரடியாக வாங்கிச் செல்கின்றனர்.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தற்போது, உடைக்காத முழு துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.85-க்கும், உடைத்த துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.126-க்கும் விற்பனை ஆகிறது. துவரம் பருப்பு சாகுபடி சீசனும் இம்மாதம் முடிவுக்கு வர உள்ளது. இதனால், அடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பை நம்பி இருக்கும் நிலை ஏற்படும்.
தற்போது, இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் துவரம் பருப்பு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.