தசரா முடிந்தது... மீன் விலை உயர்ந்தது! தூத்துக்குடியில் மீனவர்கள் உற்சாகம்

சில வாரங்களுக்கு பிறகு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தசரா முடிந்தது... மீன் விலை உயர்ந்தது! தூத்துக்குடியில் மீனவர்கள் உற்சாகம்
Published on: 

தூத்துக்குடி,

தசரா திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்ந்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தசரா விழா நிறைவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழாவையொட்டி ஏராளமானோர் விரதம் இருந்ததால் அசைவ உணவுகளை தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை குறைந்து வந்தது. தற்போது தசரா திருவிழா முடிவுற்ற நிலையில் மீன்களை வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் நேற்று காலை முதலே தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன் பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.

இந்த நிலையில் மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குறைவான நாட்டுபடகு மீனவர்களே ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றனர். அவ்வாறு சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். இவர்களுக்கு மீன்பாடு நன்றாக இருந்ததால் நேற்று திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்ட நிலையில் மீன்கள் வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்ததால் மீன்களின் விலை உயர்ந்தது.

மீன்களின் விலை உயர்வு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த வாரம் கிலோ ரூ.800 வரை விற்பனையான சீலா மீன் நேற்று கிலோ ரூ.1000 முதல் ரூ.1300 வரையும், கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்ட விளை மீன், ஊழி, பாறை போன்ற மீன்கள் கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரையும், ஒரு கூடை ரூ.700 வரை விற்பனை செய்யப்பட சாளை மீன் ரூ.3000 வரையும் விற்பனையானது.

மீனவர்கள் மகிழ்ச்சி

மேலும் பொட்டு நண்டு ரூ.350 வரையும், இறால் மற்றும் சூப்பர் நண்டு ரூ.700 முதல் ரூ.1000 வரையும், அயிலை மீன் ஒரு கூடை ரூ.4000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு பிறகு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com