கீழ் கோர்ட்டுகளில் இ-பைலிங் நடைமுறை நிறுத்திவைப்பு: சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு

கீழ் கோர்ட்டுகளில் இ-பைலிங் நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான அனைத்து கோர்ட்டுகளிலும், அனைத்து வகையான வழக்குகளையும் இ-பைலிங் முறையில்தான் தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநிலம் முழுவதும் வக்கீல்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நடைமுறை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சங்கங்கள் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டு, விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கீழ் கோர்ட்டுகளில் இ - பைலிங் முறையை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கீழ் கோர்ட்டுகளில் இ-பைலிங் முறையில் மட்டுமே வழக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என்ற நடைமுறையை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இ-பைலிங் நடைமுறை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.






