

சென்னை,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் பண்ணப்பட்டு 3-வது நாளில் உயிர்த்தெழுத்தார் என்று பைபிள் கூறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் நாளை ஈஸ்டர் பண்டிகை கெண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மூப்பர்களாலும், வேத பாரகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழியின்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான். இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, முகத்தில் காரித்துப்பி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்தனர். கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கு நடுவே, அவரும் சிலுவையில் அறையப்பட்டார்.
‘தேவாலயத்தை இடித்து மூன்று நாளுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்’ என்று நிந்தித்தனர். இருளைக் கிழித்து ஒளி எழுதல்போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.
இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.
அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அற்புதமான ஆட்சி அமைந்துள்ளது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் ஸ்டாலினின் திராவிட மாடல் நல்லாட்சி தொடரும். கூட்டாட்சித் தத்துவம் வெற்றி பெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்நாளில் சபதம் ஏற்போம்.
மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். அதற்காக இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும். கருணையைப் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.