வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடந்த ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
Published on

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலி நள்ளிரவு 1.30 மணி வரை நடைபெற்றது.

முன்னதாக, பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில், பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது. கலையரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை, பேராலய அதிபர் இருதயராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்துச் சென்றார்.

இதைத்தொடர்ந்து, பேராலய கலையரங்கின் மேற்கூரையில் சிலுவையோடு, கொடியை கையில் ஏந்தியபடி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி மின்னொளியில் தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

தேர்பவனி

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். பேராலயத்தில் ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி பேராலயத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலையில் தேர் பவனியும், திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com