

ஆலந்தூர்,
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாள் என 4 நாட்கள் தொடா விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊாகளுக்கும், கோடை சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதனால் ரெயில், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, கொச்சி, அந்தமான், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. கொடைக்கானல் செல்பவர்கள் மதுரை விமானங்களிலும், ஊட்டி செல்பவர்கள் கோவை விமானங்களையும், படகு சவாரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்பவாகள் கொச்சி, அந்தமான், கோவா விமானங்களிலும் செல்கின்றனர்.
விமான டிக்கெட் உயர்வு
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதனால் விமான கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்து உள்ளன.
சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் வழக்கமாக ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.9,800-க்கு மேல் ஆகிறது. திருச்சி விமானத்தில் வழக்கமாக ரூ.4 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது ரூ.8 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. கோவை விமானத்தில் ரூ.3 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது ரூ.9 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. சுற்றுலா தலமான அந்தமான் விமானங்களில் ரூ.13 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வழக்கமானதுதான்...
விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்தாலும் பயணிகள் விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடுவதற்கு குடும்பத்துடன் செல்கின்றனர்.
இது சம்பந்தமாக விமான நிறுவனங்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் ஏஜென்சிகளிடம் கேட்டபோது, கொரோனா பீதியால் 2 ஆண்டுகள் வீடுகளில் முடங்கி கிடந்த பயணிகள், தற்போது கொரோனா பீதி ஓய்ந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரே நேரத்தில் அதிக அளவில் குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்கின்றனர். இதனால் குறைந்த கட்டண டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டதால், தற்போது அதிக கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன. இது வழக்கமாக நடக்க கூடியதுதான் என்றனர்.