

கொடைக்கானல்,
கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்ததையொட்டி, கொடைக்கானல் நகருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இன்றி வருகை தர அரசு அனுமதித்துள்ளது. இதனால் இன்று முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை இன்று காலை 9 மணி முதல் திறக்கப்பட உள்ளன. அந்த பூங்காக்களில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
மேலும் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கடைகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதால் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், குதிரை ஓட்டுனர்கள், சைக்கிள் கடை வைத்துள்ளவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகம் அடைந்துள்ளனர். வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்த இவர்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வரப்பிரசாதமாக அமையும் என்பதில் அய்யமில்லை. அதேநேரத்தில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.