

சென்னை,
கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், பின்னர் அதிதீவிர புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ம் தேதி கரையை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் யாஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையை இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு நியூ ஜல்பைகுரி செல்லும் ரெயில், தாம்பரத்தில் இருந்து நியூ தின்சுகியா செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதேபோன்று, பெங்களூரு, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கவுகாத்தி, பூரி, பாட்னா, அகர்தலா ஆகிய நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் உள்பட 25 ரெயில்களின் சேவையை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.