ஆயுத பூஜை எதிரொலி; ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி உயர்வு

வழக்கமான நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.1200, ரூ.1500 என்ற அளவில் கட்டணம் இருக்கும்.
 ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி உயர்வு
ஆயுத பூஜை எதிரொலி
Published on: 

சென்னை,

பண்டிகை காலங்களில் உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது.

தொடர் விடுமுறை

ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாததால் அதிக கட்டண வசூல் தீபாவளி, பொங்கல் பண்டிகை மட்டு மல்லாது தொடர் விடுமுறை எப்போதெல்லாம் வருகிறதோ அதனைப் பயன்படுத்தி 2,3 மடங்கு கட்டணம் உயர்வாக வசூலிக்கப்படுகிறது.

தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமையோடு 4 நாட்கள் அரசு விடுமுறை நாளாக இருப்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது.

கட்டண உயர்வு

அடுத்த மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜையும் 20-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) விஜயதசமி பண்டிகையும் வருவதால் ஒவ்வொரு தனியார் ஆம்னி பஸ்களின் இணையதளத்தில் கட்டணங்கள் பல மடங்கு உயர்வாக குறிப்பிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பஸ்களில் 16 மற்றும் 17-ந்தேதிகளில் பயணம் செய்ய பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டண விவரங்களை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கொடைக்கானலுக்கு ரூ.4999, ஊட்டிக்கு ரூ.3500. நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு ரூ.3000க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள்

வழக்கமாக இந்த நகரங்களுக்கு செல்வதற்கு ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது பெரும்பாலான ஆம்னி பஸ்களில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய நகரங்களுக்கு செல்ல ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் முடிந்து சொந்த ஊர் திரும்ப 20 மற்றும் 21-ந் தேதி ஆகிய 2 நாட்களும் கட்டணம் 2 மடங்கு அதிகமாக உள்ளது. வழக்கமான நாட்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.1200, ரூ.1500 என்ற அளவில் கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.3500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பதிவு

2 வாரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்கின்ற நிலையில் கூட ஆம்னி பஸ்களில் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறைக்கு முந்தைய நாட்களிலும் அதற்குப் பிந்தைய நாட்களிலும் கட்டணம் குறைவாக இருக்கின்ற நிலையில் அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கட்டணத்தை உயர்த்தி வைத்திருப்பது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடைசி நேர நெரிசலையும், அதிக கட்டணத்தையும் தவிர்க்க எண்ணி 20 நாட்களுக்கு முன்பே பஸ் முன்பதிவு செய்ய முயன்ற மக்கள் இக்கட்டண உயர்வை பார்த்து செய்வ தறியாது திகைத்து நிற்கின்றனர்.

இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க மாநில தலைவர் அன்பழகன்

கூறும்போது:-

ஆம்னி பஸ்களில் அதிக பட்ச கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பது 2024-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சிலர் அதிகமாக வசூலிப்பதால் அனைத்து உரிமையாளர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் உடனடியாக அவர் மீது நட வடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com