கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: கல்லூரிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, கல்லூரிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: கல்லூரிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* பல்கலைக்கழகம், கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

* எந்த மாணவரோ, பேராசிரியரோ அல்லது ஊழியரோ கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தால், அவர்களை கண்காணிக்க வேண்டும்.

* காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பது தெரியவந்தால் பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்டவரை பரிசோதனைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அதுதொடர்பாக சுகாதாரத்துறையின் 011- 2397846 என்ற உதவி எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும்.

* மாணவர்கள் டாக்டரின் ஆலோசனையின்படி சிகிச்சை பெற வேண்டும் என்று இருந்தால், அவர் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகத்துக்குள் வரவேண்டாம்.

* மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் தங்களது கைகள் மற்றும் சுவாச உறுப்புகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும்.

* கைகளை அவ்வப்போது சோப்பு, திரவம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை, ஒரு முறை பயன்படுத்தும் காகிதம் (டிசியூ பேப்பர்) கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். அதை மூக்கு, கண்கள் மற்றும் வாயில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் காகிதத்தை குப்பைத்தொட்டியில் போட்டு, கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

* பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கை கழுவ தேவையான திரவங்களை வைத்திருப்பதுடன், கழிவறைகளில் சோப்பும், தண்ணீரும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

* அதேபோல், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளில் காலால் மிதித்து திறக்கக்கூடிய குப்பைத்தொட்டிகளை வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com