'நிபா' வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில் 'நிபா' வைரஸ் பரவி வரும் நிலையில், அந்த தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், வாலிபர் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் 'நிபா' வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

'நிபா' வைரஸ் தாக்கம் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் தமிழகத்துக்கு வந்தால், அவர்களை மாநில சுகாதாரக் குழுவினர் எல்லையிலேயே நிறுத்தி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது தமிழகத்தில் அச்சப்படக்கூடிய சூழல் எதுவுமில்லை. அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கும் 'நிபா' வைரஸ் தொடர்பாக அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு உள்ளது. அறிகுறியுடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 'நிபா' வைரஸ் பரவலை தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களின் சோதனைச்சாவடிகளில் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களும் பெறப்படும். கேரளாவில் இருந்து வருவோருக்கு தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com