தேசமெங்கும் பொருளாதார சாதனை; ஜோசப் விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வேதனை- நயினார் நாகேந்திரன்

ஜிஎஸ்டி பங்களிப்பிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை, தவெக அரசு தனது ஆட்சி காலத்தில் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

தேசமெங்கும் பொருளாதார சாதனை ஜோசப் விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வேதனை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

பெரும் பின்னடைவாகும்

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பொருளாதார கொள்கைகளால், அக்டோபர் மாதத்தில் நாடு தழுவிய ஜிஎஸ்டி வசூல் ரூ.2.3 லட்சம் கோடியை தாண்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆனால், ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாக திறமையின்மையால், தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி தேசிய சராசரியை விட கடுமையாக சரிந்து, வெறும் 3 சதவீதம்-ஆக முடங்கிக் கிடப்பது தமிழகத்திற்கு பெரும் பின்னடைவாகும்!

ஜிஎஸ்டி வளர்ச்சி

ஒரு காலத்தில் தொழில் உற்பத்தியிலும் ஜிஎஸ்டி பங்களிப்பிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை, தவெக அரசு தனது ஆட்சி காலத்தில் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது. பின்தங்கிய மாநிலமாக கூறப்பட்ட உத்தரப் பிரதேசம் 24 சதவீதம் வளர்ச்சியையும், அண்டை மாநிலங்களான ஆந்திரா 24 சதவீதம் மற்றும் கேரளா 23 சதவீதம் எனப் பல மாநிலங்கள் இரட்டை இலக்க ஜிஎஸ்டி வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஆனால், தமிழகத்திலோ கடந்த மூன்று மாதங்களில் வரி வளர்ச்சி -5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருப்பது இந்த அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாகத்தை காட்டுகிறது.

பொருளாதார மந்தநிலை

தமிழகத்தில் ஜிஎஸ்டி வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக சரிந்ததற்கு, மாநிலத்தின் முதுகெலும்பான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகளே முக்கிய காரணம். தவெக அரசின் தெளிவற்ற தொழில்துறை கொள்கைகள், அரசு அனுமதிகளில் நிலவும் காலதாமதம் மற்றும் வணிகர்களுக்கான ஆதரவின்மை ஆகியவை உற்பத்தி சூழலை முடக்கியுள்ளன. இத்துடன், புதிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்வதும், உள்கட்டமைப்பை மேம்படுத்தாத நிர்வாக மெத்தனமுமே தமிழகத்தை பொருளாதார மந்தநிலைக்கு தள்ளியுள்ளன.

அவல நிலை

இந்த அவல நிலையை மாற்ற, நலிவடைந்து வரும் குறு, சிறு தொழில்களுக்கு உடனடி நிதி ஆதரவும் வரி சலுகைகளும் வழங்குவதோடு, தொழில் தொடங்குவதை எளிதாக்கும் 'ஒற்றை சாளர' (Single Window) அனுமதி முறையை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் உலக முதலீட்டாளர்களை தக்கவைக்கும் வகையிலான கவர்ச்சிகரமான முதலீட்டு கொள்கைகளை வகுப்பதுமே இதற்கான நிரந்தர தீர்வாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X