அதிமுகவில் பிளவு இல்லை.. எடப்பாடி கே.பழனிசாமி கிங் மேக்கர் என்பது இல்லை..அவரே கிங்தான் - செம்மலை

அதிமுக - திமுக கூட்டணியா என்ற கேள்விக்கு எந்த முடிவானாலும் பொதுச்செயலாளர் எடுப்பார் என முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவு இல்லை.. எடப்பாடி கே.பழனிசாமி கிங் மேக்கர் என்பது இல்லை..அவரே கிங்தான் - செம்மலை
Published on

சென்னை,

தமிழக அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி இல்லாமல் தவியாய் தவித்து தவிக்கிறது.

ஆட்சி அமைக்க விஜய் 2 முறை உரிமை கோரிய போதிலும், அவருக்கான அழைப்பை கவர்னர் விடுவிக்கவில்லை.

சட்டப்பேரவையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென கவர்னர் கருதுகிறாரோ, அவரையே ஆட்சி அமைக்க அழைக்க அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதுமான பலம் இருப்பதை கவர்னரிடம் உறுதிப்படுத்த வேண்டும். கவர்னரின் இந்த முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாது.

இதற்கிடையே, அரசியலில் பெரும் திருப்பமாக, எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் - அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாகவும், அதிமுக ஆட்சி அமைக்க திமுக தனது ஆதரவை கொடுக்க இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்தது.

எனினும், இதனை திமுக தலைவர் ஸ்டாலினும் மறுத்தார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இதனை மறுத்தனர். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து தற்போது வரை எந்த மறுப்பும் வெளியாகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

இதற்கு மத்தியில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சுமார் 30 பேர் புதுவையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும், இன்னொரு தரப்பு தவெகவிற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று கூறினார். அவர் கூறுகையில், அரசியல் நிலைப்பாட்டில் எதை எப்போது, எப்படி செய்ய வேண்டும்? என்பது எடப்பாடி பழனிசாமிக்கு கச்சிதமாக தெரியும். எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கிறாரோ, என்ன நினைக்கிறாரோ அது, அந்த முடிவு நல்ல முடிவாகத் தான் இருக்கும்" என்றார்.

அப்போது, அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செம்மலை, எந்த முடிவாக இருந்தாலும் பொதுச்செயலாளர் எடுப்பார்" என்றார். அப்போது எடப்பாடி கிங் மேக்கரா என கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதில் அளித்த செம்மலை, எடப்பாடி கிங் மேக்கர் அல்ல.. அவரே கிங் தான்.." என்று பதில் அளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com