‘எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக மாறிவிட்டார்' - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசிடமிருந்து தெளிவான உறுதிப்பாட்டை ஏன் கோரவில்லை? என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், 4 அடுக்குகளை கொண்ட ஜி.எஸ்.டி. வரியை 2 அடுக்காக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ தள பதிவில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை முழு மனதுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக மாறிவிட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாக மாறிவிட்டார் என்பதற்கு சான்றாகவே இந்த பதிவை பார்க்கிறேன். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விதிமுறைகளை நீங்கள் உற்சாகத்துடன் பாராட்டினாலும், மாநிலத்தின் வருவாயை பாதுகாக்கவும், மாநிலங்களின் நிதி சுயாட்சியை பாதுகாக்கவும் மத்திய அரசு முறையான நிதிப் பகிர்வு அல்லது வருவாய் வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்பதை ஏன் ஒரு வரியில் கூட நீங்கள் குறிப்பிடவில்லை?
தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கான தங்கள் பங்களிப்பை தக்கவைக்க வலுவான நிதி உதவியைப் பெற வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு தலைவராக, தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசிடமிருந்து தெளிவான உறுதிப்பாட்டை நீங்கள் ஏன் கோரவில்லை?
தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நீதிக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள்! தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், உங்கள் வசதிக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களின் நிதி நலனையும், உரிமைகளையும் புறக்கணிக்கிறீர்களா?”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






