

மதுரை,
உத்தர பிரதேசத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்த சுற்றுலா ரெயிலில் மதுரை ரெயில் நிலையம் அருகே இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரெயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரெயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசும், தெற்கு ரெயில்வே நிர்வாகமும் துரிதமாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ரெயிலில் பயணித்த பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனவும், ரெயில் தீ விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும், காயமுற்றோருக்கு மத்திய-மாநில அரசின் நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 26, 2023 ">Also Read: