

சென்னை,
கொரோனா தொற்று தமிழகத்திலும் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் 12 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. இடையிடையே பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. 12-வது கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார். முதலில், காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பதை விரிவாக கேட்டு அறிகிறார்.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் 11.30 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே, மத்திய அரசு பிப்ரவரி 28-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே, தமிழகத்திலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகளை அளிப்பது குறித்தும் இன்று முடிவு செய்யப்பட இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பஸ், ரெயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் திறக்கப்பட்டுவிட்டன. கல்லூரிகளை பொறுத்தமட்டில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. பள்ளிகளை பொறுத்தமட்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்தும், பள்ளிகளில் பிற வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.