

வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 3-வது நாளாக பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவேண்டிய தேர்தலை சூழ்ச்சி, சதி செய்து நமது வெற்றியை தடுப்பதற்காக நிறுத்திவிட்டார்கள். மத்திய அரசும், மாநில அரசும், தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு, வருமான வரித்துறையை வைத்து தேர்தலை நிறுத்தினார்கள். ஆனால் தேர்தலை நாம் நிறுத்தியதாக நம் மீது களங்கம் சுமத்துகிறார்கள். அவர்களுடைய பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
சட்டமன்றத்தில் மக்களுக்காக திட்டங்களை அறிவிக்கிறார்கள், அதற்கு நிதியும் ஒதுக்குகிறார்கள். ஆனால் அத்தனை நிதியும் திரும்பி போய்விட்டது. இதை நான் சொல்லவில்லை. சி.ஏ.ஜி. அறிக்கையில் திட்டங்களுக்காக அரசு ஒதுக்கிய நிதி பயன்படுத்தப்படாமல் திரும்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக ரூ.1,627 கோடி ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் முழுவதும் திரும்பி சென்றுவிட்டது. குடிநீர் திட்டத்திற்காக ரூ.2,064 கோடி ஒதுக்கப்பட்டது. சாலை, பாலங்களுக்காக ரூ,2,034 கோடியும், நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.1,729 கோடி என 2017-18-ம் ஆண்டில் ரூ.18,179 கோடி திரும்பி சென்றுள்ளது.
இப்படி நிதியை பயன்படுத்தாத ஆட்சியை உதவாக்கரை ஆட்சி என்பதைவிட வேறு என்ன சொல்லமுடியும். அதேபோன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு 2013 முதல் 2018 வரை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 75 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.50 ஆயிரம் கோடி திரும்பி சென்றுவிட்டது.
8 வழிச்சாலையை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால் தடையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோட்டில் அப்பீல் செய்கிறார். விவசாயிகளை பற்றி கவலைப்படாத பழனிசாமியை எப்படி விவசாயி என்று கூறமுடியும்.
புதிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வுசெய்ய ஒரு குழு அமைத்து அதன் ஆய்வறிக்கை தி.மு.க. நாடாளுமன்ற துணைத்தலைவர் கனிமொழி தலைமையில் அதற்கான துறை மந்திரியிடம் வழங்கப்பட்டுள்ளது. நமது சார்பில் அனுப்பப்பட்ட 37 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் தினமும் குரல்கொடுத்து வருகிறார்கள்.
எனவே கதிர்ஆனந்தையும் நாடாளுமன்றம் அனுப்பினால் அவர் உங்களுக்காக தொண்டாற்றுவார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.