

சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். வருகிற 31-ந் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பதை மாவட்ட கலெக்டர்களிடம் விரிவாக கேட்டு அறிகிறார். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். கலெக்டர்கள் அளிக்கும் தகவல்களை வைத்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பஸ், ரெயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் திறக்கப்பட்டுவிட்டன. கல்லூரிகளை பொறுத்தமட்டில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. பள்ளிகளை பொறுத்தமட்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்தும், பள்ளிகளில் பிற வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இதுதவிர கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வர இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? என்பது குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகுதான், மருத்துவ நிபுணர்கள் கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகளை மேலும் தளர்த்துவது குறித்து புதிய அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி 31-ந் தேதி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.