சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 6 மாடி கட்டிடம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டப்படவுள்ள 6 மாடி ‘டவர் பிளாக்’ கட்டிடங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 6 மாடி கட்டிடம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
Published on

சென்னை,

குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மீன் ஏலக்கூடம்; செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் மேம்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு மையம் என மொத்தம் 12 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை கட்டிடங்களை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பங்கு ஈவுத்தொகை

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் 2019-2020-ம் நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையான 2 கோடியே 40 லட்சத்து 64 ஆயிரத்து 222 ரூபாயில், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகைபோக, மீதமுள்ள பங்கு ஈவுத்தொகையான 1 கோடியே 40 லட்சத்து 64 ஆயிரத்து 222 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை முதல்-அமைச்சரிடம் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

சென்னை- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.135.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 48 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு, நச்சு முறிவு சிகிச்சை மையம், கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு ஆகிய மருத்துவமனைக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

விளையாட்டு கட்டிடம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கான புதிய தலைமை அலுவலக கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். அங்கு கீழ் தளம், தரை மற்றும் 6 தளங்களுடன், அலுவலக அறைகள், கூட்டரங்கங்கள், வாகன நிறுத்துமிடங்கள், மின்தூக்கிகள், மையப்படுத்தப்பட்ட குளிரூட்டு வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உள்ளன.

சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், நேரு உள்விளையாட்டரங்கம் மற்றும் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கங்களில் சிறப்பு பழுது நீக்கப்பணிகள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல்; மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் உள்ள கையுந்துபந்து ஆடுகளம் மற்றும் பார்வையாளர் மாடத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கல்வலூம் மேற்கூரை;

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி கட்டிடம் என மொத்தம் 21 கோடியே 16 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

உலக கோப்பை கேரம் போட்டி

கடந்த 2018-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற 5-வது கேரம் உலக கோப்பை போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டிகளில் 2 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் சுவிஸ் லீக் போட்டிகளில் ஒரு வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர் கே.சகாயபாரதியை பாராட்டி உயரிய ஊக்கத்தொகை ரூ.40 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் வழங்கினார்.

சதுரங்க விளையாட்டில் 2019-ம் ஆண்டிற்கான சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக வீரர் டி. குகேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் வழங்கினார்.

கடந்த 2009-2010-ம் ஆண்டு முதல் 2017-2018-ம் ஆண்டுகள் வரையிலான சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான முதல்-அமைச்சரின் மாநில விளையாட்டு விருது 16 வீரர்கள் மற்றும் 12 வீராங்கனைகள் என 28 பேருக்கும், சிறந்த பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான முதல்-அமைச்சரின் விருது 27 நபர்களுக்கும் என மொத்தம் 55 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 55 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு பத்திரம் மற்றும் நினைவுப்பரிசுகளும், சிறந்த நடுவர்களுக்கான விருது பெறும் 5 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பதக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் நினைவுப்பரிசுகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

ஆசிரியை முல்லை

ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வரும் பி.முல்லை, பள்ளியில் நடந்த விபத்தின்போது சமயோசிதமாக செயல்பட்டு 26 மாணவர்களை எவ்வித காயமும் இன்றி காப்பாற்றியபோது படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்காக 14 லட்சத்து 58 ஆயிரத்து 334 ரூபாய் சிகிச்சை செலவினம் ஏற்பட்டது.

இதை சிறப்பு நிகழ்வாக கருதி, ஆசிரியைக்கு ஏற்பட்ட சிகிச்சை செலவினத்தை வழங்கும் விதமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அந்த தொகைக்கான காசோலையை ஆசிரியை பி.முல்லைக்கு வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com