சலுகை விலையில் சத்து மாத்திரை, சோதனைக் கருவி பெட்டகம் - புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தனிமையில் இருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் சலுகை விலையில் சத்து மாத்திரை, சோதனை கருவிகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சலுகை விலையில் சத்து மாத்திரை, சோதனைக் கருவி பெட்டகம் - புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் சலுகை விலையில் சத்து மாத்திரை, சோதனை கருவிகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையத்தை, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை ஒப்புயர்வு மையத்தை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

இந்த மையத்தில், 350 படுக்கைகளில், 35 படுக்கைகள் அதிதீவிர சிகிச்சைக்களுக்காகவும், 165 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடனும், 15 தனி அறை வசதிகளும், 3 அதிநவீன சிகிச்சை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்;

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் வெங்குப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.29.8 கோடி மதிப்பீட்டிலான மருத்துவமனை கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலமாக அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு சேவை திட்டத்தின் கீழ், சலுகை விலையான ரூ.2,500-ல், 14 நாட்களுக்கான தொகுப்பாக ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, ஒரு டிஜிட்டல் வெப்பமானி, 14 முககவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரணம் மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 ஜிங்க் மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள், கோவிட் கையேடு ஆகியவை அடங்கிய பெட்டகங்களை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அலுவலருக்கு பெட்டகத்தை வழங்கி முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.

இதன்மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வருவதோடு, தீவிர நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கும் ஏதுவாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com