

மே தின வாழ்த்து
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் உன்னத தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்கும் லட்சிய பயணத்தின் தொடக்கமாக நடப்பாண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும் என்று மீண்டும் ஒருமுறை உளமாற வாழ்த்துகிறேன்.
இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்து ரமேஷ் நாடார், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார் உள்ளிட்டோரும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.