109-வது பிறந்தநாள்: அண்ணாசிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
109-வது பிறந்தநாள்: அண்ணாசிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
Published on

சென்னை,

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவருடைய சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு கீழே பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்பட அமைச்சர்களும், அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நந்தம் விசுவநாதன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி. பிரபாகர், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க.(அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்களான வெற்றிவேல் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், மாவட்ட செயலாளர் கலைராஜன் உள்ளிட்டோர் அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி செலுத்தினர்.

எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, அவருடைய கணவர் மாதவன் ஆகியோரும் தனித்தனியாக வந்து அண்ணாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் தலைமையில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம் உள்பட நிர்வாகிகளும், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன், தென்னிந்திய பொது நல இயக்கத்தின் பொதுச்செயலாளர் பி.வி.ராஜேந்திரன் உள்பட பலரும் அண்ணாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பாராளுமன்ற வளாகம்

பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அரக்கோணம் தொகுதி எம்.பி., திருத்தணி கோ. அரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com