

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் நேரில் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் 19-வது மாவட்டமாக நேற்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ஆய்வு பணிகளை மேற்கொள்ள வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில், ரூ.2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக கட்டிடம், ரூ.3 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் குத்தம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 15 வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்பட ரூ.14 கோடியே 94 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து, ரூ.1 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கும்மிடிப்பூண்டி மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டிடம், ரூ.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திருவேற்காடு நகராட்சி அலுவலக கட்டிடம், ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர், பாப்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், அயப்பாக்கம், வானகரம், பனப்பாக்கம், புள்ளிலைன், நடுக்குத்தகை ஆகிய இடங்களில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்பட ரூ.7 கோடியே 23 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான கட்டிடங் களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தொடர்ச்சியாக வருவாய்த்துறை சார்பில் 1,835 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 860 பேருக்கு விபத்து நிவாரண நிதி உதவி, 50 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்ட நிதியுதவி, மகளிர் திட்ட துறை சார்பில் 305 பேருக்கு அம்மா இரு சக்கர வாகனம், 186 பேருக்கு மகளிர் சுய உதவி குழு வங்கிக் கடன், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 441 பேருக்கு பசுமை வீடு, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 22 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 23 பேருக்கு திருமண நிதி உதவி உள்பட 10 துறைகளின் சார்பில் 7 ஆயிரத்து 528 பேருக்கு ரூ.51 கோடியே 68 லட்சத்து 22 ஆயிரத்து 356 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், எம்.எல்.ஏ.க்கள் பலராமன், நரசிம்மன், விஜயகுமார், அலெக்சாண்டர், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வக்கீல் கோ.சீத்தாராமன், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், ஒன்றிய துணை செயலாளர் இந்திரா வரதராஜன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் கந்தசாமி, இன்பநாதன், ஞானகுமார், சந்திரசேகர், போளிவாக்கம் ஊராட்சி செயலாளர் மணி, பூந்தமல்லி முன்னாள் நகர மன்றத் தலைவர் பூவை ஞானம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் அரிகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரங்க கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார். ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மகளிர் சுய உதவி குழுக்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.