

சென்னை,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்புகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெறும். ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, அரசுக்கு துணையாக இருந்த துணை முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். முன்னாள் முதல் அமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபால் பேசும்பொழுது, அவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என கூறினார். சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு என்றும் அவர் கூறினார்.