பள்ளிகளை திறப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் - கல்வித்துறை விளக்கம்

நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும், பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிகளை திறப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் - கல்வித்துறை விளக்கம்
Published on

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளன.

இதற்கிடையே மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் அவ்வப்போது நிருபர்களை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்று தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவியது. இந்த தகவலுக்கு பள்ளி கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது. சூழ்நிலை சரியானதும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துகளுக்கேற்ப, சூழ்நிலையை பொறுத்து பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com