கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தல்

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.
கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தல்
Published on

ராஜீவ்காந்தி கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை தவிர்த்து, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்து, தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம், கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனாலும் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் எந்தவித முடிவும் அறிவிக்காமல் இருந்து வந்தார்.

கவர்னர் முடிவு

இந்தநிலையில், பேரறிவாளன் தன்னுடைய தண்டனையை நிறுத்திவைத்து, விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜராகிய சொலிசிட்டர் துஷார் மேத்தா, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு பரிந்துரைத்த தீர்மானம் குறித்து 3 அல்லது 4 நாட்களில் கவர்னர் முடிவு அறிவிப்பார் என்று கடந்த 21-ந் தேதி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

இதனை தெரிவித்து ஒரு வாரம் கடந்த நிலையில், நேற்று இரவு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு காரில் சென்றார்.

இரவு 7.50 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர் சாய்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

விடுதலை செய்ய வலியுறுத்தல்

இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி தங்களிடம் வழங்கியுள்ளோம். அது தொடர்பாக உடனே முடிவு எடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதுகுறித்த கோரிக்கை மனுவையும் அளித்தார்.

அதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர், அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று கவர்னரை சந்தித்தது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com