காவிரி பிரச்சினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காவிரி நதிநீர் பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காவிரி பிரச்சினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நேற்று 6 இடங்களில் நடந்த கட்சி கொடியேற்று விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் கோரணம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள தி.மு.க. அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நிலை குறித்து அக்கறையில்லாத முதல்-அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

நாடகமாடுகிறார்

மேட்டூர் அணையில் இன்னும் குறுகிய காலத்திற்கான நீர் இருப்யே உள்ள நிலையில், காவிரி பாசன பகுதி விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்குள்ள முதல்-மந்திரி மற்றும் அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக விவசாயிகளின் நிலை குறித்து பேசி, உரிய நேரத்தில் காவிரி நீரை பெற்றுத்தர தவறிய நிலையில், பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொண்டார்.

பின்னர் அவர் தமிழகம் திரும்பிய நிலையில் மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கு காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதி இருப்பது, அவர் காவிரி நதி நீர் பிரச்சினையில் கபட நாடகமாடுவதை வெளிச்சமாக்கி உள்ளது. ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தபோதும், காவிரி நதி நீர் பிரச்சினைக்காக 22 நாட்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதை யாரும் மறக்க முடியாது.

ஊழல்

தற்போது தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதை தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த முன்னாள் நிதி அமைச்சரின் ஆடியோ உரையாடலே அம்பலப்படுத்தி உள்ள நிலையில், ஊழல் செய்து சேர்த்த பணத்தை காப்பாற்றுவதிலேயே தி.மு.க. அமைச்சர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்போதுள்ள தி.மு.க. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லாத நிலையில், குடும்ப அரசியல் நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வினரை பார்த்து அடிமைப்பட்டு கிடப்பதாக குற்றம் சாட்டுகிறார். ஆனால் உண்மையில் அ.தி.மு.க. கட்சியோ, அதனுடைய நிர்வாகிகளோ, தொண்டர்களோ எந்த கட்சிக்கும் அடிமைப்பட்டவர்கள் இல்லை. மாறாக தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்த பணத்தை காப்பதற்காக பல இடங்களில் அடிமைப்பட்டு கிடக்கின்றனர்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com