வணிகம், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வணிகம், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மின்சார வாரியத்திற்கு 2021-2022-ம் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன என்று ஏற்கெனவே எனது முந்தைய அறிக்கையில் தெளிவாகக் கூறியிருந்தேன்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற இந்த தி.மு.க. அரசு, எந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தாமல், செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளியில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி, தமிழக மின்சார வாரியத்திற்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தற்போது வணிக நிறுவனங்களும், சிறு, குறு மற்றும் பெரிய தொழிற் சாலைகளும் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அவர்களுக்கு இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய நிர்வாகத்திறனற்ற தி.மு.க. அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துள் கொள்கிறேன்.

மின் வாரியம் என்பது லாப நஷ்டம் பார்த்து இயங்கக்கூடிய வணிக நிறுவனம் அல்ல. இது ஒரு சேவைத் துறை. இதைத்தான் அம்மாவின் அரசு 8 வருடங்களாக செயல்படுத்தி, தமிழக மக்களுக்கு மின் கட்டண உயர்வே இல்லாமலும், மின் வெட்டு இல்லாமலும், மாநில அரசின் நிதியைக் கொண்டு சரிசெய்து வந்தது. தி.மு.க. அரசு, இரண்டாவது முறையாக இப்போது உயர்த்தியுள்ள இந்த மின் கட்டண உயர்வுக்கும், 9.11.2021-ம் நாளிட்ட மத்திய அரசு ஆணையையும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளது.

எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அதுவும், இந்தக் கோடை காலத்தில் மின் வெட்டால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் தினமும் பல இடங்களில் மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக் கொண்ட இந்த திமுக அரசு, வெளிமார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அம்மா ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தைக் கணக்கிடுவோம் என்று சொன்ன இந்தத் திறமையற்ற அரசு, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை மின் கட்டண உயர்வு என்ற சுமையை தமிழக மக்களின் தலையில் ஏற்றியுள்ளது. தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தர முடியாத நிர்வாகத் திறமையற்ற தி.மு.க. அரசு, வாக்களித்த மக்களுக்கு மேலும் மேலும் கட்டணச் சுமையை ஏற்றி துரோகம் செய்ய வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com