

சென்னை,
அதிமுக பொதுசெயலளார் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்" என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை மந்திரு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நதிநீர் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று காவிரி நதிநீர் தொடர்பான போற்றத்தக்க இறுதி தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ் நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கத் தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பில், ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது' எனத் தெரிவித்துள்ளது. மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை எனது தலைமையிலான அம்மாவின் அரசு 25.2.2017, 27.2.2017, 4.9.2018, 8.10.2018 மற்றும் 22.11.2018 ஆகிய நாட்களில், பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வலியுறுத்தினேன். மத்திய நீர்வளத்துறை மந்திரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்த் பிரச்சனையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. 2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மிகத் தெளிவாக "காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை மந்திரி பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.
காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்கள் நடத்திய பின்பு, சுப்ரீம் கோர்ட் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு மிக பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.