

சென்னை:
அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு தரப்பினரும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு தரப்பினரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினரும் சட்டமன்றத்தில் தங்கள் தரப்பினரை கொறடாவாக நியமிக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்தனர். தவெக அரசு மீது சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் தரப்பு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, புதிய மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி பொதுக்குழுவை கூட்ட முயற்சித்து வரும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், நாளை காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. உட்கட்சி பூசல் முற்றிய நிலையில், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.