

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 47 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் அக்கட்சிக்குள்ளே பல்வேறு பிரச்சினைகள் அரங்கேறி வருகின்றன. அதாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். இவ்வாறு அ.தி.மு.க.வுக்குள் பல்வேறு குழப்பம் நீடித்து வருகிறது.
இந்தநிலையில், பசுமை வழிச்சாலை இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவிருந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
அதிமுக இரண்டு பிரிவுகளாக உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். தவெக அரசுக்கு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவளிக்கும் சூழலில் அடுத்தது என்ன? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.