பிரபாகரனுக்கு நிகரான வீரத்தைக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி - ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் பேசிய அவர், "அதிமுகவை எதிர்க்க திமுகவிற்கு தைரியமும் துணிச்சலும் கிடையாது. அதிமுகவிற்கு கண்னுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே கிடையாது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிசாமி இருக்க மாட்டார்.
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி என் மீது அவதூறு வழக்குகள் போடப்பட்டது. என்னை சிறையில் அடைக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கெல்லாம் நான் பயந்து விட்டேனா? அல்லது ஓடி ஒடுங்கி விட்டேனா? அல்லது கட்சியில் இருந்து ஓரம் போய்விட்டேனா?. திமுக சதி திட்டம் ஒருப்போதும் நடக்கவே நடக்காது.
இதுவரை நான் யாரையும் ஏமாற்றியதும் இல்லை. எந்த ஒரு மோசடி செய்யவில்லை. திமுகவை நாட்டை விட்டு விரட்டும் வரை நான் ஓயமாட்டேன். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி நடக்கும். பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சிகள் கூறி வருகிறது. ஆனால் வரும் 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெறாது.
பிரபாகரனுக்கு நிகரான வீரத்தைக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள், அதற்காக தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்" என்று ராஜேந்திரபாலாஜி கூறினார்.