எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுசேர வாய்ப்புள்ளதா? முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பதில்

அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பிரிந்து நிற்கும் தலைவர்கள் வருங்காலத்தில் ஒன்றாக இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பதில் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுசேர வாய்ப்புள்ளதா? முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பதில்
Published on

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கலந்துகொண்டு, அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பிரிந்து நிற்கும் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருங்காலத்தில் ஒன்றாக இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அணிகளின் தலைவர்கள் அவரவர் தலைமையில்தான் கட்சி இயங்கவேண்டும் என்று நினைப்பதால், இணைப்பு நடக்க வாய்ப்பு இல்லை. இரட்டைத் தலைமையால் கட்சியை வழிநடத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது நிர்வாகிகள் எடுத்த முடிவுதானே தவிர, இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றி இருக்கிறார். மக்களும், தொண்டர்களும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதை அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு கொடுப்பதை வைத்து புரிந்துகொள்ள முடியும். அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் உடைக்கமுடியாது. தமிழக மக்கள் அ.தி.மு.க. பக்கம் திரள ஆரம்பித்துவிட்டார்கள்.

இவ்வாறு பி.வி.ரமணா கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி தொடருமா? அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறுகிறதா? அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி சீரழிக்கிறாரா? தி.மு.க.வின் 1 ஆண்டுகால ஆட்சி குறித்தான பார்வை உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பொறுமையாகவும், விளக்கமாகவும் பி.வி.ரமணா பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com