

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, எடப்பாடி அணி மற்றும் சண்முகம் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். பதவியை ராஜினாமா செய்த 3 பேரும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டார். எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் செய்த நிலையில், அவர்களது மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக தமிழ்நாடு அரசிதழில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இன்று சபாநாயகரை சந்தித்தனர். அப்போது, ராஜினாமா செய்துள்ள 3 பேரின் கடிதத்தையும் ஏற்கக்கூடாது என சபாநாயகரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொறடாவின் உத்தரவை மீறியது தொடர்பான அ.தி.மு.க. மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ராஜினாமா முடிவை எப்படி சபாநாயகர் ஏற்கலாம் எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.