

சென்னை,
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடி, நாளை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 11.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து காரில் போரூர் சென்று, மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் கிண்டி ஐ.ஐ.டி.யில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். தொடர்ந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். சுமார் 5 மணி நேரம் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் போரூர் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டு, அனைத்து பயணங்களையும் காரில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. வழியில் சில இடங்களில் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு எஸ்.பி.ஜி. அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, சென்னை பழைய விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 3 நாட்களுக்கு எஸ்.பி.ஜி. அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த 3 நாட்களுக்கும் விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க நாளை (அக்.11) சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.